இளம் வயதில், என் அன்பான அத்தை கல்யாணி எனக்கு பரிசளித்த புத்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததால் விழித்த என் மனம் ஒரு தேடலைத் தொடங்கியது. எல்லோரும் மரணம் என்னும் முடிவிலிருந்து தப்ப முடியாது என்கையில், வாழ்வதின் நோக்கம் என்ன?
இந்த ஆழமான கேள்வி என்னைச் சுற்றிய பொருளாதாரச் சவால்கள் மத்தியில், தென்னிந்தியாவில் உள்ள ஒரு எளிய கிராமத்திலிருந்து உலகளாவிய கட்டங்களுக்குச் செல்லும்படி என்னை முடுக்கியது. என் குடும்பத்தின் அசைக்க முடியாத ஆதரவு என் இறக்கைகளுக்குக் கீழே காற்றின் வேகமாக மாறியது. இது எங்கள் பொருளாதாரச் சூழ்நிலைகளை உயர்த்தவும், ஒரு காலத்தில் சாத்தியமற்றது என்று தோன்றியதைத் தாண்டிச் செல்லவும் என்னை ஊக்குவித்தது.
என் பயணம் கிண்டி பொறியியற் கல்லாரியில் இருந்த காலத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை எடுத்தது. அங்கு பிற்காலத்தில் இன்ஃபோசிஸில் வெற்றிகரமான தொழிலுக்குப் பொறியியல் அடித்தளம் அமைந்தது. இன்ஃபோசிஸின் மூலம், பல நாடுகளில் உள்ள நிறுவனங்கலின் செயல்திட்டங்களின் வெற்றிக்கான வழிகள், அதற்காகப் பல தொழில்நுட்ப அணிகளை உருவாக்குதல், மற்றும் தொழில்நுட்பத்தை வடிவமைப்பது நிர்வகிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சோதனைகள் நிறைந்த ஆனால் பெரும்பாலும் வெற்றிப் பாதைகளாகவே அனைத்து வருடங்களும் அமைந்தன.
இருப்பினும், பெருநிறுவன உலகம் மட்டும் என் வாழ்க்கைக்கதாபாத்திரத்தை வரையறுக்கவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே கலையும், நான் யார் என்று அறிவதில் இருந்த முனைப்பும் ஒரு பறவையின் இரு சிறகுகளைப் போல என்னைத் தொய்வின்றித் தூக்கி நடத்தின. எழுதுவது, பேசுவது, நாடகங்களை இயக்கி நடிப்பது, என அமெரிக்காவில் எனது வேலைக் கால முயற்சிகளுடன் எனது படைப்பாற்றல் வளர்ந்தது. தமிழ் இலக்கியத்தின் வளமான படைப்புகள் மனிதம் புரியும் பயணத்தில் ஒரு புதிய ஆழத்தை ஏற்படுத்தின. எனது உலகளாவிய அனுபவங்கள் மற்றும் நட்புறவுகள் மூலம், ஒரு முக்கிய உண்மையை நான் புரிந்து கொண்டேன், அன்பு அனைத்துச் சாதனைகளின் கருவறையாகும் என்பதை. இந்தத் தெளிவு 2002 இலிருந்து நான் பின்பற்றும் சகஜ மார்க்கம் - ஹார்ட்புல்னஸ் தியானத்தால் மேலும் ஆழமானது.
சிறு வயதில் இருந்தே நான் கற்றதை மற்றவருக்குத் தருவதை இயல்பாகக் கொண்டிருந்த நான், கல்லூரியில் படிக்கும்போதும் தொழிலுகத்தில் நுழைந்த பின்னரும் தொடர்ந்து கொண்டேயிருந்தேன். வாழ்க்கை சிக்கல்கள் வரும்போது என் நண்பர்கள், அணியினர் என்னை அணுகுவதும் என்னால் இயன்றவரை அவர்கள் மனச்சுமை குறைத்து, எனக்குத் தெரிந்த உளவியல் முறைகள் மற்றும் தியானம் அளிப்பதுவும் இன்று வரை தொடரும் ஆனந்தம்.
பின்னர் உளவியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றேன். கற்ற கல்வியறிவு, மற்றும் உலகம் பழகிய அனுபவ அறிவு இவற்றின் துணைகொண்டு, பல சோதனைகளுக்கிடையில் - கலை மற்றும் உளவியல்/தன்னை உணர்தல் இந்த இரண்டு துறைகள் மூலம் ஒரு தொழில் முனைவோனாக, எனது சொந்த முயற்சிகள் மூலம் என் வாழ்வாதாரத்தை ஈட்டும் ஒரு அரிய வாய்ப்பு பெற்றவனாக இன்று உங்கள் முன் நிற்கிறேன்.
இந்த இணைய தளத்தில், என் படைப்புகளைப் பற்றிய தகவல்களை நிரப்பியிருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது பயன்படுமெனில் என்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனது படைப்பு முயற்சிகளில் பங்கேற்கும் அன்பு நண்பர்கள் மற்றும் சக தொழிலாளிகளுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது குடும்பமும் ஆன்மீக வழிகாட்டிகளும் எனது பண்பின் அடித்தளத்தைத் தந்தனர். ஒத்துழைப்பு, உற்சாகம் மற்றும் கூட்டு முயற்சியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எனது வாழ்வு அன்பில் வேரூன்றியுள்ளது.
2016 ஆம் ஆண்டில், ஒரு மறக்கமுடியாத அக்டோபர் மாலை, என் அன்பான நண்பர் பாட் மலோனி என்னை 'சிட்டிசன் கே - Citizen K ' என்று அன்பாக அழைத்தார். அந்த நாளில்தான் எனது நாட்டிற்கும் உலகிற்கும் குடிமகனாக இருப்பதன் அர்த்தத்தை நான் ஆழமாகப் புரிந்து கொண்டேன். மேலே என்னுடன் புகைப்படத்தில் இருக்கும் எனது விசுவாசமான மகன் கீகன் (Keegan) - எல்லா உயிர்களும் ஒன்று என்று உணர்த்தியவன் - அவன் நினைவாகவும் என் முன்னோர் அளித்த பரிசு இவ்வாழ்க்கை என்பதை இரண்டாவது K குறிக்க - சிட்டிசன் கேகே (Citizen KK) என்ற புனை பெயர் பிறந்தது.
என் கண்கள் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து என் இதயத்தை அன்பின் முடிவற்ற ஆழத்திற்குக் கூட்டிச்சென்று நெகிழ்த்திவரும் எனது ஒரே மகளுக்கு எனது முயற்சிகளும் அவற்றின் விளைவுகளும் அர்ப்பணம். இந்த விளைவுகள் அன்பையும் திறமையையும் வளர்க்கும் என் உணமையான முயற்சிப் பயணத்தின் மைல்கற்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் பயணிக்க வருக.
நன்றி,
சிட்டிசன் கேகே