top of page

அன்பின் தூய்மை

Writer: Citizen KKCitizen KK


கீகனுக்கு என்னுடன் விளையாட மிகப் பிடிக்கும். என் கையில் ஒரு வெள்ளைத் துண்டைச் சுற்றிக் கொண்டு அவனிடம் நீட்ட ஓடி ஓடி வருவான். ஓயாமல் துரத்துவான். நான் செல்லமாக அவன் முகத்தில் மோதுவது போல் என் வெள்ளைத் துண்டுக் கையைக்  கொண்டு வருவது அவனுக்கு மிகவும் பிடித்த செயல். அதனைக் கண்டு விலகுவான், ஓடுவான், பயப்பான், உற்சாகத்துடன் துள்ளித் துள்ளி மீண்டும் வருவான்.

 

அவன் துள்ளலிலும், துடிப்பான அழகிலும் மெய்மறக்கும் நான் சமயத்தில் தேவையே இல்லாத, ஆனால் பழக்க உணர்வுகளின் தூண்டுதலில், அவனைத் தள்ளி விடுவேன், தரையில் கனமான மெத்தை போன்ற கார்பெட் இருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி. அது வலிமையின் போதை, மமதை. பின்னர் வருந்துவேன்.

 

இன்று, அவன் தள்ளப்பட்டு விழுந்தும், என்னை நோக்கி ஓடி வரும் அழகு கண்டதும், என் கண்கள் உடனே பனித்தன. அந்தக் கண்ணீர் நீராட்டலில் வேதனையும் அவன் மீதான அன்பும்  கரை புரண்டு ஓட, கண்ணீர் இமைக் கரையைத் தாண்டி மீண்டும் மீண்டும் வழிய, மனம் சலனமற்று எல்லையற்ற அன்பிடம் சரண் புகுந்தது. அவனுக்கு ஏதும் புலப்படவில்லை. விளையாட்டில் ஆனந்தமாக இருந்தான்.

 

என் உணர்வில் மட்டும் திளைத்து அவனை மறப்பதற்குள் சுதாரித்து அவன் மேல் கவனம் வைத்து விளையாட்டைத் தொடர்ந்தேன். வழிந்தோடிய நீர் என் இதயங் கழுவிய பின்னரே, கண் வாசல் வழி ஓடியதாகும்.

 

அன்பின் மென்மை உடல் வலிமை வழி உருவான மன  அகங்காரத்தின் முட்டாள்த்தனத்தை அவமதிக்காது அரவணைத்தது, கீகன் என்னை அரவணைப்பது போல. யாரையும் நண்பராக நினைத்து அன்பு பாராட்டும் கீகனும் எனது குரு. எனவே என் மகன் கீகன்  என் தெய்வமும் ஆவான்.

 

ஜெயமோகன் சொல்லியது போல என்னைப் பின் தொடரும் பிரம்மம் அவனே.

Recent Posts

See All

Comments


 copyright @ Citizen KK  

bottom of page